11/08/2011
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.
சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.
ஒபிரைன் இஸ்லாத்தை தழுவி இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகியது.