11/12/2011

சவுதி அரேபியா, ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அலுவலகத்தில் ஒரு ஹிந்து சகோதரர் இஸ்லாத்தை ஏற்றதாக அறிவித்தார். தான் இஸ்லாத்தை ஏற்று 3 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ராஜா என்ற என்னுடைய பெயரை ராஜா முஹம்மத் என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் இஸ்லாம் என்னை ஏன் கவர்ந்தது என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கூடியிருந்த மக்களிடையே தன்னார்வத்துடன் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்.
கடவுளை வணங்கச் செல்லும் பொழுது மற்ற மதங்களைவிடவும் இஸ்லாம் தூய்மையாக இருக்கச் சொல்கிறது என்று சில ஒப்பீடுகளுடன் விளக்கினார். இந்த தூய்மை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களிடையே நிலவும் சகோதரத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

என்னுடன் பணிபுரியும் முஸ்லிம் சகோதரர்கள் விண் டி.வியில் ஒளிப்பரப்படும் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சியை காணும் பொழுது நானும் அதை தொடர்ந்து பார்வையிட நேர்ந்தது என்றும் , என்னுள் இஸ்லாமிய சிந்தனை தழைத்தோங்க பிள்ளையார் சுழி இட்டவர்களில் முதன்மையானவராக சகோதரர் பி.ஜே அவர்களை இறைவன் ஆக்கியிருக்கிறான் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக கூடியிருந்த மக்களை நோக்கி நீங்கள் அனைவரும் எனக்கொரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டவர், என் பெற்றோர்கள் என்னை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள் என்றும், அவர்களும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று என்னுடன் வாழ நீங்கள் அனைவரும் அந்த வல்ல இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கூடியிருந்த அனைவரும் நிச்சயமாக செய்வோம் என்று சொல்வது போல் தலையசைத்து இன்ஷh அல்லாஹ் என்று ஒருமித்து கூறினார்கள்.

ஒருவேளை எனது பெற்றோர்கள் நான் ஏற்ற இந்த ஓரிறைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் என்னை இஸ்லாம் என்ன செய்யச் சொல்கிறது என்று ஒரு கேள்வியையும் எழுப்பினார்.

அதற்கு இலங்கையை சேர்ந்த மௌலவி ஹாபிஸ் அவர்கள் அளித்த விளக்கத்தின் சுருக்கம் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது.

நீங்கள் வினவும் நிலை போன்றதொரு சூழல் அன்றைய காலத்தில் ஒரு சில நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. அந்த தருணங்களில், ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக நிர்பந்தப்படுத்தும் போதும், மார்க்கத்தில் இல்லாத விசயங்களை செய்யச் சொல்லி தூண்டும் போது மட்டும் அவர்களுக்கு (பெற்றோர்களுக்கு) மாறு செய்யச் சொல்லி இஸ்லாம் கூறுகிறது. மேலும் , அவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்காதிருந்தாலும் கூட அவர்களை நல்லமுறையில் பராமரிக்கச் சொல்கிறது. அவர்களுக்கு சிறப்பாக பணிவிடை செய்யச் சொல்லியும் இஸ்லாம் கட்டளையிடுகிறது என்றும் விளக்கினார். மேலும் , பல கருத்து பரிமாற்றங்களை செய்த சகோதரர் ராஜா முஹம்மது அனைவருக்கும் சலாம் சொல்லி மகிழ்ச்சியாக விடைபெற்றார்.

விடைபெற்று வெளியே செல்ல ஆயத்தமான அந்த சகோதரரை சில கேள்விகள் கேட்க நாம் அனுகினோம். பொதுவாக சவுதி அரேபியாவிற்கு வரும் மாற்று மத சகோதரர்களை பணம் கொடுத்து மனம் மாற்றி முஸ்லிமாக மாற்றுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டோம். உங்களுக்கு யாரும் பண ஆசை காட்டியதால்தான் நீங்கள் இஸ்லாத்தை தழுவினீர்களா என்று நாம் கேட்டது போல் கருதிய அந்த சகோதரர் உடனடியாக இல்லை, கிடையவே கிடையாது என்று கூறினார். அப்படி யாரும் என்னை அனுகியிருந்தால் நான் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டேன் என்றும் சொன்னார்.

முஸ்லிம்கள் தங்களது இறைவன் கட்டளையிட்டபடி அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் இஸ்லாத்தை எடுத்தியம்பினாலும், மனித உள்ளத்தினுள் அந்த ஓரிறைக் கொள்கையை கொண்டு சேர்க்கும் பொருப்பு மனிதர்களுடையதல்ல. அது இறைவனால் மட்டுமே முடியும் , அப்படி இறைவனால் அருள் செய்யப்பட்டவர்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள், நெஞ்சுரத்தோடு காணப்படுவார்கள், தீர்க்கமாக பேசுவார்கள். சகோதரர் ராஜா முஹம்மத் அவர்களும் உறுதியாகவும், நெஞ்சுரத்தோடும், தீர்க்கமாகவுமே காணப்பட்டார். புகழுக்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

கண்டதும், கேட்டதும்...
முத்துப்பேட்டை பரக்கத்அலி ரியாத்திலிருந்து...

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments