11/08/2011
அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக் என்பவர் இஸ்லாத்தை தழுவிய பின் முதல் முறையாக உம்ரா கடமையை நிறைவேற்றியுள்ளார். இதன்போது சவூதியின் தினசரிப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த டெர்ரி ப்ரூக் (முஸ்தபா அப்துல்லா) தான் இஸ்லாத்தை தழுவிய அற்புதத்தை பகிர்ந்து கொண்டார். 2003ஆம் ஆண்டு அமெரிக்க படை வீரரான டெர்ரி ப்ரூக் இராணுவ மெய்க்காப்பாளராக பதவிப் பிரமாணம் புரிந்து அதிகம் சிறப்பு பெயர் பெற்றிராத குவாண்டனமோ சிறைக்கு காவலராக மாற்றப்பட்டார். அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட அவருக்கு அவரைப் பீதியடைய செய்யும் அளவுக்கு திடுக்கிடும் பல விடயங்கள் காத்திருந்தன. முஸ்லிம்களின் வீடு என்று சொல்லும் அளவுக்கு தாலிபான் மற்றும் அல்கைதாவை சேர்ந்த பலர் அங்கு இருப்பதைக் கண்டு முதலில் வேலை செய்ய அஞ்சிய ப்ரூக், தான் பல வித விஷ ஜந்துக்களுடன் வேலை பார்க்கப்போவதாக எண்ணும் அளவுக்கு வெறுப்புடனேயே பணிக்குச் சேர்ந்துள்ளார். பின்னர் சில நாட்களில் மொரோக்கவை சேர்ந்த அஹமத் அல் ரஷ்தி என்பவருடனும் மற்றும் சில முஸ்லிம்களுடனும் நட்புறவு ஏற்பட்டதாகவும், தினமும் இரவு வேளைகளில் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வெளியில் இருந்து இஸ்லாத்தைப் பற்றி கேட்டறிந்ததாகவும், தான் இஸ்லாத்தை தழுவியது மறக்க முடியாத சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், டிசம்பர் 2003 ஆம் ஆண்டு அதிகாலை 12.49 மணியளவில் நான் இஸ்லாத்தை தழுவினேன். என்னைச் சுற்றி அமர்ந்திருந்த என்னுடைய சக தோழர்களும் என்னை முஸ்தபா முஸ்தபா என்று அழைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. பின்னர் முஸ்தபா என்ற என் பெயருடன் அப்துல்லா என்றும் சேர்த்துக் கொண்டதன் பின் `முஸ்தபா அப்துல்லா' என்று அனைவராலும் அழைக்கப்பட்டேன். என்னுடைய வாழ்க்கைக்கு சரியான வழியை இறைவன் சிறை எண் 590ல் இருந்த `அல் ரஷீதி' மூலமாகத் தான் கிடைக்கச் செய்தான். இது வரை கண்டிராத குவாண்டனாமோ சிறைக்கு என்னை மாற்றம் செய்வதை அறிந்து வேதனைக்கு உள்ளான எனக்கு அங்கு தான் நேர்வழி இருந்தது தெரியாமல் போனது. குவாண்டனமோ போகும் வரை கடவுள் மீது நம்பிக்கை இல்லாத எனக்கு அந்த சிறையில் தான் நான் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையையும், ஒப்பற்ற நேர் வழியையும் பெற முடிந்தது. நானும் என்னுடன் இருந்த மற்ற சில காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்காகவும், இஸ்லாத்தை தழுவியதற்கு எதிராகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். பின்னர் இராணுவத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டோம். இப்பொழுது நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு என்னைப் பற்றியும், நான் இஸ்லாத்தை தழுவிய அனுபவத்தைப் பற்றியும் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும், அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்படுவதை பற்றியும் நான் எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். |